சென்னை, மடிப்பாக்கம், R.R நகர் பகுதியில் வசித்து வரும் தட்சிணாமூர்த்தி, வ/52, த/பெ.முத்து என்பவர் சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான ராஜாராம் என்பவர் மும்பையைச் சேர்ந்த பீர்முகமது பாதுஷா என்பவர் இரிடியம் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய தட்சிணாமூர்த்தி 2017 முதல் 2024 வரை சிறுக சிறுக என மொத்தம் ரூ.92 லட்சம் பணத்தை பீர்முகமது பாதுஷா என்பவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் பீர்முகமது பாதுஷா கூறியது போல் பணம் தட்சிணாமூர்த்தியின் வங்கி கணக்கில் ரூ.5 கோடி வரவு ஆகாத காரணத்தினால், தட்சிணாமூர்த்தி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, பீர்முகமது பாதுஷா, தட்சிணாமூர்த்திக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தட்சிணாமூர்த்தி, S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், மோசடி பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி பீர்முகமது பாதுஷா, வ/47, தானே, மகாராஷ்டிரா மாநிலம் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பீர்முகமது பாதுஷா என்பவர் இரிடியத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தை சட்டபூர்வமாக டிரஸ்ட் மூலம் பெற்று அதிக லாபம் தருவதாக கூறியும், புகார்தாரரின் குடும்பத்தினரை மும்பைக்கு வரவழைத்து அவார்டு ஷீல்டு கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தியும், பணம் ரூ.5 கோடி வங்கி கணக்கில் வரவு ஆகும் என்று ஆசை வார்த்தை கூறி, அதற்காக RBI ஒப்புதல் வாங்க வேண்டும், NOC வாங்க வேண்டும் என்று பல்வேறு காரணங்கள் கூறி, சிறுக சிறுக பணம் ரூ.92 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி பீர்முகமது பாதுஷா விசாரணைக்குப் பின்னர், (29.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
