சென்னை, வேளச்சேரி, TNHB காலனியில் வசித்து வரும் ராகேஷ், வ/19, த/பெ.தாமு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 28.07.2025 அன்று இரவு, வேலை முடித்து, வேளச்சேரி, 100 அடி சாலையில் உணவு அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த 2 நபர்கள், அருகில் உள்ள டிபன் கடையில் இறக்கிவிடுமாறு, மேற்படி ராகேஷின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனம் கைவேலி அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தை நிறுத்திய, மேற்படி இருவரும், ராகேஷை தகாத வார்த்தைகள் பேசி, மிரட்டி, அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு, அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றனர். இது குறித்து ராகேஷ், J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.நவீன்குமார், வ/24, ஜமீன் பல்லாவரம், சென்னை, 2.அன்புமணி, வ/25, பள்ளிக்கரணை, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் ஆகியவை மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும், விசாரணைக்குப் பின்னர் (29.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
