ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழ்நாடு அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு தடை விதித்தது. ஒரு நம்பர் லாட்டரி சீட்டு எனப்படும் சுரண்டல் லாட்டரியால் நாசமாகி வரும் குடும்பங்களை காக்க, தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான கேரளா, வட மாநிலங்களில் லாட்டரி சீட்டு தடை செய்யப்படவில்லை. சில ஆண்டுகள் அமைதி காத்த லாட்டரி உரிமையாளர்கள், தற்போது மீண்டும் தீவிரமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்து, தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார்கள் குவிந்து கொண்டே இருந்தன. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சம்புபாய் என்கிற நசீர் என்பவரை லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, மற்றும் தனிப்படை எஸ்.ஐ. ராஜா உள்ளிட்ட தனிப்படை டீம் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சம்புபாய் என்கிற நசீர், லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காக காவல்துறையில் யாரெல்லாம் உதவி செய்கிறார்கள், யாருக்கெல்லாம் மாமூல் கொடுத்துள்ளார் என்ற விபரம் தனிப்படை போலீசாருக்கு ஆதாரத்துடன் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, எஸ்.ஐ. பரணிதரன், சிறப்பு எஸ்.ஐ. கணேசன், நடராஜன், காவலர் கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்தி உள்ளிட்ட 7 பேர் மாமூல் வாங்கிக் கொண்டு, லாட்டரி சீட்டு விற்பனைக்கு துணையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வேலூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சம்புபாய் என்கிற நசீர், இசை சரவணன், கிருபாகரன், முருகன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரே நேரத்தில் சிதம்பரம் டி.எஸ்.பி, சிதம்பரம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேர் பணி மாறுதல் செய்யப்பட்ட சம்பவம், கடலூர் மாவட்ட காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கான பின்னணி கூடுதல் தகவல்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, லாட்டரி சீட் விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க சொல்லி ஐ.ஜி. அஸ்ரா கார்க், எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் உத்தரவிட்ட பிறகும் கூட, தனிப்படை ரெய்டு வரும்போதெல்லாம், லாட்டரி விற்பனையாளர்களான சம்புபாய் என்கிற நசீர், சரவணன், கணேசன் உள்ளிட்டோருக்கு, சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார், தகவல் கொடுத்து தப்பிக்க வைத்துக் கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தனிப்பிரிவு சிஐடி பரணிதரன் தான் இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
அதாவது, சிதம்பரம் நகரில் உதவி ஆய்வாளராக பரணிதரன் என்பவர் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனிப்பிரிவு சிஐடி, சட்டம்-ஒழுங்கு என சிதம்பரம் பகுதியிலேயே பணிபுரிந்து அங்குள்ள கட்டப்பஞ்சாயத்தார்களிடம் தொடர்ந்து பணம் பெற்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீண்ட வருடங்களாக லாட்டரி விற்பனையில் கொடிகட்டி வந்த சம்புபாய் என்கிற நசீருடன் தொடர்பில் இருந்து வந்ததை 2011 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட எஸ்பி ஆக இருந்த சக்தி கணேஷ் கண்டுபிடித்து, எச்சரித்து சார்ஜ் மெமோ கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு என்று பரணிதரன் தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், அரசியல் பின்புலத்துடன் மீண்டும் சிதம்பரத்திற்கு வந்த அதே சம்புபாய், கணேசன், மாரியப்பன் ஆகிய மூன்று லாட்டரி மொத்த வியாபாரிகளிடமிருந்து தலா ஒரு லட்சம் வீதம் மாதம் ஒன்றிற்கு மூன்று லட்சம் மாமூலாக பெற்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அவ்வப்போது சிதம்பரம் நகருக்கு வருகை தரும் அதிகாரிகளை மகிழ்வித்து, குளிர்வித்து அனுப்பி வைப்பதில் கைதேர்ந்தவர் என்பதால் எஸ்.ஐ. பரணிதரனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. தற்போது வரை அங்கு சம்பாதித்தது கோடிக்கணக்கில் இருக்கும் என குற்றம்சாட்டப்படுகிறது. கஞ்சா மற்றும் டாஸ்மாக்கிலும் மாமூல் வசூலித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் மீதான விசாரணையை மேற்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தீவிரப்படுத்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டிய போலீசாரே துணையாக இருந்ததும், ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை டீம் அதை கண்டுபிடித்து, லாட்டரி விற்பனையாளர்களுக்கு துணையாக இருந்த போலீசாரை வேறு மாவட்டத்திற்கு தூக்கியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
