கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் இ.கா.ப. திறந்து வைத்தார். பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச்செயல்களை விரைவாக கண்டறிந்து தடுப்பதற்கும் இந்த நவீன கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் விரிவான கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடிகரை, கேஸ் கம்பெனி பகுதி, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் டவுன், திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிப்பாளையம், கூ.கவுண்டம்பாளையம், கோவனூர், பாலமலை, எண்.4 வீரபாண்டி, சாமநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், ஒன்னிப்பாளையம், காளிப்பாளையம் மற்றும் தொட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 236 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.


மேலும் கோவை – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் முதல் பெட்டதாபுரம் வரை உள்ள முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில் 60 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனுடன் வாகன எண்களை துல்லியமாக பதிவுசெய்யும் 6 ஏஎன்பிஆர் (ANPR – Automatic Number Plate Recognition) கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு கேமராக்கள் எண்.4 வீரபாண்டி பகுதியில் மற்றும் இரண்டு கேமராக்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மண் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கண்காணிக்க அரசு சார்பில் 20 கூடுதல் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறை மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் விளைவாக பொதுமக்களும் பாதுகாப்பு பணியில் இணைந்து தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுமார் 1,500 சிசிடிவி கேமராக்களை தாங்களாகவே பொருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அனைத்து கேமராக்களையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்கள் 14.03.2026 அன்று திறந்து வைத்தார்.
இந்த புதிய கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றச்செயல்களை விரைவாக கண்டறிந்து தடுப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
