தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஏப்ரல் 23 மற்றும் 29-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 5 பகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் 6.44 கோடி, தமிழகத்தில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி, புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.இதனால் மொத்தமாக 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் சேர்த்து 17.4 கோடி வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒரு வாக்குச் சாவடியில் 750 முதல் 900 வாக்காளர்கள் வரை வாக்களிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 75,032 வாக்குச் சாவடிகள், புதுச்சேரியில் 1,099 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
