தமிழக அரசியலில் டெல்டா மாவட்டங்கள் எப்போதும் ஒரு மாற்றத்திற்கான விதையை விதைக்கும் இடமாகத் திகழ்கின்றன. அந்த வரிசையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான பேராவூரணி, தற்போது உற்று நோக்கும் ஒரு பரபரப்பு மையமாக மாறியுள்ளது.1967ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, நிரந்தர அரசியல் ஆதிக்கத்தை ஏற்காத “ஸ்விங்” தொகுதி என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த தொகுதியின் வாக்காளர்கள் செயல்திறன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் தன்மை கொண்டவர்கள் என்பதும் கடந்த தேர்தல் வரலாற்றிலேயே தெளிவாக தெரிகிறது. ஒரே கட்சி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தாத இந்த தொகுதி, மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய தொகுதியாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. என். அசோக்குமார் அவர்கள் செய்த ‘சாதனைகள்’ என்று எதையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பதுதான் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த குமுறலாக இருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக அண்மையில் மரக்காவலசை ஊராட்சி மக்கள் ஒட்டிய போஸ்டர், தமிழக அரசியலில் ஒரு புதுவிதமான அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தொகுதியிலும் இல்லாத வினோதமான போராட்டத்தை மரக்காவலசை கிராம மக்கள் முன்னெடுத்துள்ளனர். பொதுவாக மக்கள் பிரதிநிதிகளுக்கு மாலை அணிவிப்பதும், வரவேற்பு கொடுப்பதும் வழக்கம். ஆனால், பேராவூரணி எம்.எல்.ஏ-வுக்கு மக்கள் அளித்திருப்பது ஒரு பெரிய ‘வெள்ளை முட்டை’.
“எங்கள் எம்.எல்.ஏ ஐந்து வருடத்தில் எதைச் சாதித்தார்?” என்ற கேள்விக்குப் பதிலாக, ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அவரது சாதனையாக ஒரு ‘முட்டை’ (பூஜ்யம்) படம் போடப்பட்டுள்ளது. இது ஏதோ விளையாட்டாகச் செய்யப்பட்ட காரியம் அல்ல; ஐந்து ஆண்டு கால புறக்கணிப்பின் ஆழமான வலி.
மக்கள் பட்டியலிடும் குறைகள்:
* சாலை வசதி: மரக்காவலசை முத்தரையர் குடியிருப்பு மற்றும் மரவன்வயல் பகுதிகளுக்கான தார் சாலை கோரிக்கை ஐந்து ஆண்டுகளாக மனுவாகவே உறங்குகிறது.
* அடிப்படை கட்டமைப்பு: பச்சிளம் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும், வெயிலிலும் மழையிலும் மக்கள் தவிப்பதைத் தவிர்க்கக் கடைத்தெருவில் நிழற்குடையும் கூட அமைக்கப்படவில்லை
* பட்டா பிரச்னை: நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமான வீட்டு மனை பட்டா கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.
“வாக்கு கேட்க வரும்போது இருந்த அந்த ஆர்வம், வெற்றி பெற்ற பிறகு எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பும் மக்கள், எம்.எல்.ஏ அசோக்குமார் தங்கள் பகுதியைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். “எங்களை எட்டியும் பார்க்காத நல்ல உள்ளத்திற்கு நன்றிகள்” என்ற மக்களின் நக்கலான வாசகம், தற்போதைய எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு எவ்வளவு மோசமாகச் சரிந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.
சாலை மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், வடிகால் வசதி, கிராமப்புற சாலை பழுது நீக்கம் போன்ற பணிகள் பல இடங்களில் தாமதமாக உள்ளதாக கூறப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் மக்கள் இன்னும் டேங்கர் லாரிகளையே நம்பி வாழும் நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம் முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த தொகுதியில் கால்வாய் சீரமைப்பு மற்றும் நீர்ப்பாசன பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என விவசாயிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் முழுமையடையவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனுடன், பேராவூரணி பகுதியில் நிதி முறைகேடு குறித்த விவகாரம் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுமார் ₹1 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலை மேம்பாடு, குடிநீர் வசதி, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகள் நடைமுறையில் முழுமையாக நடைபெறாதபோதும், நிதி செலவிடப்பட்டதாக ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறைவு இருந்ததா என்ற கேள்வி எழுந்தது. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களுக்கு பயனளிக்க பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் வாக்காளர்களிடையே பரவியது. இதனால் நிர்வாகத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.
மேலும் பொதுமக்கள் மத்தியில் சமூக அடிப்படையிலான அதிருப்தியும் உருவானதாக கூறப்படுகிறது. அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டதாக சில பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்தது. வீட்டு திட்டங்கள், சாலை மேம்பாடு, குடிநீர் இணைப்புகள் போன்றவை சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே அதிகமாக வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதனால் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த உணர்வு தேர்தல் நேரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். சமூக சமநிலை குறித்த கேள்விகளும் தேர்தல் விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு எதிராக இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை வீசும் நிலையில், மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது அதிமுக-வின் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, அதிமுக வேட்பாளராகக் களம் காணும் கோவி. இளங்கோ (முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் புதல்வர்) மக்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

* எளிமையும் அணுகுமுறையும்: தற்போதைய எம்.எல்.ஏ-வை சந்திக்கவே முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இளங்கோ அவர்கள் எளிய மக்களும் எளிதில் அணுகக்கூடிய ஒரு நபராகப் பார்க்கப்படுகிறார்.
* வாரிசு என்றாலும் உழைப்பாளி: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், இவர் தனது சொந்த உழைப்பின் மூலமும், மக்களின் நீண்டகாலப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதன் மூலமும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
மக்கள் ஆதரவு இளங்கோ பக்கமே இருந்தாலும், அதிமுக-வின் வெற்றிக்கு ஒரு முக்கியமான தடையைக் கட்சியினரே உணர்ந்துள்ளனர். அதுதான் கட்சிக்குள் இருக்கும் பிளவு. தற்போது அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பது தொண்டர்களிடையே ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் இம்முறை தேர்தலில் கணிசமான வாக்குகளை ஈர்க்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் இந்த கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் பாரம்பரிய வாக்கு தொகுப்புகள் சிதறக்கூடும். மூன்றாவது மற்றும் நான்காவது அரசியல் சக்திகள் களமிறங்குவதால் வாக்கு விகிதங்களில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கணிப்புகள் என்ன சொல்கின்றன?
2021 தேர்தலில் சில காரணங்களால் கை நழுவிப்போன இந்தத் தொகுதியை மீட்பது இளங்கோவுக்கு எளிதான காரியம் தான். ஆனால் அதற்கு “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்பது தொண்டர்களின் எதிர்ப்பாக உள்ளது.
* இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் தலைமையும், உள்ளூர் நிர்வாகிகளும் இளங்கோவின் வெற்றி என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒன்றிணைந்தால், 2026 தேர்தலில் அதிமுக-வின் வெற்றி தவிர்க்க முடியாதது.
* பிரிந்திருக்கும் வாக்குகளை ஒருங்கிணைக்க இளங்கோவின் தனிப்பட்ட செல்வாக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
* தற்போதைய எம்.எல்.ஏ-வின் மீது இருக்கும் “ஆன்டி-இன்கம்பன்சி” (ஆட்சேபனை அலை) மற்றும் மக்கள் கொடுத்த ‘முட்டை’ முத்திரை, இளங்கோவுக்குச் சாதகமான வாக்குகளாக மாறும்.
பேராவூரணி தொகுதி மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். வெறும் வெற்று வாக்குறுதிகளையும், ‘முட்டை’ சாதனைகளையும் அவர்கள் இனி ஏற்கப் போவதில்லை. அடிப்படை வசதிகளைத் தராத, தங்களை எட்டிப்பார்க்காத ஒரு பிரதிநிதிக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் தயாராகிவிட்டனர்.
அதே சமயம், இளங்கோ போன்ற திறமையான மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது அதிமுக-வுக்குப் பெரும் பலம். கட்சியின் உட்பூசல்களைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒருமித்த கருத்துடன் அதிமுக களப்பணியாற்றினால், பேராவூரணி கோட்டை மீண்டும் இரட்டை இலை வசமாவது உறுதி. ‘முட்டை’ சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் விரைவில் தங்கள் தேர்தல் தீர்ப்பின் மூலம் விடை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.வெற்றி யாருக்கு என்பது மக்களின் கைகளில் இருக்கிறது.
