திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்காடு அருகே நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் பரம்பரை சொத்து பிரச்சினையைத் தொடர்ந்து ஏற்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.


கோவில்காடு, பச்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனபால் (44) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் அருகில் வசித்த அவரது உறவினர் ராமசாமிக்கும் இடையே பரம்பரை சொத்து பிரிப்பு தொடர்பாக நீண்டநாள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சம்பவ தினமான 17.07.2020 அன்று தனபால் வீட்டருகே இருந்த மரக்கிளை ராமசாமி வீட்டில் விழும் அபாயம் இருப்பதாக கூறி அதை வெட்டுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ராமசாமியும் அவரது மகன் ராமச்சந்திரனும் மண்வெட்டி மற்றும் அரிவாள் கொண்டு தனபாலின் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பிச்சை என்பவரும் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலையத்தில் 17.07.2020 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்கு திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி ராமசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்தார். மேலும் இரண்டாவது குற்றவாளி ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்ற நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்ட முசிறி காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
