தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கட்டயங்காடு நவக்கொல்லைக்காடு மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து உபயோகபடுத்தும் கட்டாயத்தில் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்து தடம் எண்:39 பயன்படுத்துகிறார்கள்.
கொரோனா தடை காலத்திற்கு முன்பு வரை நகரபேருந்து தடம் என 39 பாளத்தளி வழியாக பேராவூரணிக்கும், தடம் எண் 6 புனல்வாசல் வழியாக பேராவூரணிக்கும் காலை 8 மணி, 8.10 மணிக்கும் சென்றன. தற்போது தடம் எண் 6 நிறுத்தப்பட்டு தடம் எண் 39 மட்டும் இயக்கப்படுகிறது. கொன்றைக்காடு பேராவூரணி மார்க்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ஒரு பேருந்தை மட்டும் நம்பி உள்ளனர். இந்த பேருந்து ஒட்டங்காடு வருவதற்கு முன்பே நிரம்பி விடுவதால் ஒட்டங்காட்டில் உள்ள எந்த பேருந்து நிறுத்தத்திற்கும் நிற்காமல் சென்று விடுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சில நேரங்களில் வேறுவழியில்லாமல் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணங்கள் மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது. பள்ளி சென்ற தன் பிள்ளை எப்படி பயணம் செய்தார், மாலை பள்ளி முடிந்து விபத்தில் சிக்காமல் வீடு திரும்புவாரா என்று தினம் தினம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி காலை நேரத்தில் நிறுத்தப்பட் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கை.. நிறைவேற்றுவார்களா? பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்?