இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர மூட்டைகளை ‘பாரத்’ என்ற பெயரில்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு உர நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான விவசாயிகளும் இந்த திட்டத்தால் தங்களுக்கு பயனில்லை என்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன?
இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற எல்லா உரநிறுவனங்கள்ளும், ‘பாரத்’ என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும்.பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி மற்றும் பாரத் என்பிகே போன்ற பெயர்களில்தான் இனி உரம் விற்கப்படும்.
மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும், முத்திரை, பிரதான்மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்படவேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புத் தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது பட்டியில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு அதாவது முதல் இரண்டு பட்டியில், “பாரத்” பிராண்ட் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா முத்திரை காட்டப்பட வேண்டும். அக்டோபர் 2ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைப்படி உரத்தை விற்கும்போது புதிய சாக்கு பைகளைதான் பயன்படுத்தவேண்டும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பழைய உரமூட்டைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பயன்படுத்தி முடித்துவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசு இந்த திட்டத்தை ஏன் கொண்டு வருகிறது?
அனைத்து மானிய உரங்களுக்கும் ஒரே ‘பாரத்’ முத்திரையை அறிமுகப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச் செலவில் 80- & 90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உணவு மானியத்திற்கு அடுத்ததாக, உரத்திற்குதான் அரசு அதிகளவில் பணத்தை ஒதுக்கவேண்டியுள்ளது. அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அந்த மானியம் ஒதுக்கப்படுகிறது.
யூரியா தவிர, டிஏபி, எம்ஓபி போன்ற உரங்களின் விலையை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கு மானியம் தரவேண்டியுள்ளது. மானியம் பெற்றாலும், உர நிறுவனங்களின் பெயரில்தான் உரம் விற்பனை ஆகிறது என்பதால், பெயரை பொது பெயராக மாற்றவேண்டும் என அரசு எண்ணுகிறது.
உர நிறுவனங்களுக்கு ஏற்படும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவு போன்றவை மானியத்தில் ஈடுசெய்யப்படுகிறது. ஆனால், ஒரே விதமான உரங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள், பல விதமான பிராண்ட் பெயர்களை கொண்டிருப்பதால், அவை தயாரிக்கும் இடங்களில் இருந்து விற்பனை ஆகும் இடங்களுக்கு சென்று சேருவதற்கு ஆகும் செலவில், அரசின் மானியமும் பெரியளவில் வீணாவதாக மத்திய அரசு கருதுகிறது. இதனால், உரங்களின் சரக்கு கட்டணத்தை குறைப்பது மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு கூறுகிறது.
மண்ணுக்கு ‘முழு உடல் பரிசோதனை’ செய்தீர்களா? அது ஏன் முக்கியம்?
ஏதும் விளையாத களர் நிலத்தில் விளையும் பாரம்பரிய நெல் களர்ப்பாலை: அழிவிலிருந்து காக்கும் கிராமம் அதாவது, எல்லா உரங்களும் ஒரே பெயரில் வழங்ப்படுவதால், ஒரு குறிப்பிட்ட பெயர் கொண்ட நிறுவனத்தின் உரம், சந்தைகளில் கிடைக்காத நேரத்தில், மற்ற நிறுவனத்தின் உரத்தை வாங்க விவசாயிகள் யோசிக்கமாட்டார்கள். இனி பெயரளவில் உள்ள உரத்தை தேட மாட்டார்கள் என்பது அரசின் நம்பிக்கை. பெயரை முக்கியத்துவபடுத்தி, நிறுவனங்கள் ஒரு இடத்தில் இருந்து தொலைதூர இடத்திற்கு உரங்களை கொண்டுசெல்வது குறையும் என அரசாங்கம் கருதுகிறது.
உர தயாரிப்பு நிறுவனங்கள் திட்டத்தை ஏன் கடுமையாக எதிர்க்கின்றன?
எல்லா உர நிறுவனங்களின் உரம் ஒரே பெயரில் விற்கப்பட்டால் ஒருவேளை, எதாவது ஒரு உரமூட்டையில் தரம் குறைவாகவோ, அல்லது மோசமாக இருந்தால், ஒட்டுமொத்தமாக விவசாயிகள் எல்லா பிராண்ட் உரங்களை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தலாம். அந்த விளைவுகளை எல்லா நிறுவனங்களும் ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது உர நிறுவனங்களின் வாதம். உர நிறுவனங்கள் தங்களது உரத்தை விற்பனை செய்வதற்காக பிராண்ட் விளம்பரம் செய்வதில் இருந்து விலகிக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது பிராண்ட் பெயர், முத்திரை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற நிலையில், விளம்பரம் செய்வதில் அவர்களுக்கு பயனில்லை. தங்களது பிராண்ட் பெயரை விவசாயிகள் மத்தியில் நிலைநிறுத்துவது மற்றும் நற்பெயரை ஏற்படுத்துவது என்பதற்காக பல ஆண்டுகளாக உரநிறுவனங்கள் பணத்தை செலவிட்டுள்ளன. அந்த பணிகளில் இனி தொய்வு ஏற்படும். அதோடு, புதிய அல்லது மேம்பட்ட உரங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
விவசாயிகள் சொல்வது என்ன?
பெயர் மாற்றத்தால் எதுவும் மாறப்போவதில்லை என்பதுதான் விவசாயிகளின் கூற்று. எல்லா உரங்களின் பெயர்களும் பாரத் என்ற பெயரில் விற்கப்படுவதால் எந்த மாற்றமும் தங்களுக்கு ஏற்படாது என்கிறார்கள். “உரத்தின் விலையை அரசு கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வெறும் பெயரை மாற்றுவதால் விவசயிகளுக்கு லாபம் இல்லை” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பெ. சண்முகம். “மண்ணுக்கு ஏற்ற உரத்தைதான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள். ஒரே பெயரில் இருப்பதால், மேலும் அவர்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். பெயர் மாற்றம் பலனளிக்காது. பெரும்பாலும் உர உற்பத்தி என்பது இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அதற்கு மானியமும் கொடுப்பதற்கு பதிலாக, இந்தியாவில் நம் மண்ணுக்கு ஏற்ற உரஉற்பத்தியை தொடங்கினால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசயிகள் பயன்பெறுவார்கள்” என்கிறார் அவர்.