தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt) ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் அளிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
அரசாணை எண். 14, இயற்கை வளங்கள் (எம்.எம்.சி.1) துறை, நாள்:12.06.2024- ன்படி 28.06.2024 அன்று தென்காசி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் தென்காசி வட்டத்தில் 90, செங்கோட்டை வட்டத்தில் 35, கடையநல்லூர் வட்டத்தில் 55, ஆலங்குளம் வட்டத்தில் 34, வீரகேரளம்புதூர் வட்டத்தில் 18, சங்கரன்கோவில் வட்டத்தில் – 30, சிவகிரி வட்டத்தில் 17 மற்றும் திருவேங்கடம் வட்டத்தில் 22 ஆக மொத்தம் 301 பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt) ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75க.மீ ஹெக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் / களி மண் எடுக்க இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை அனுமதி வழங்கப்படும். விவசாய பயன்பாட்டிற்கு புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டர் / ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் / களி மண் எடுக்க இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை அனுமதி வழங்கப்படும். மண்பாண்ட தொழில் செய்ய 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் ஊரணி, குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகள், மற்றும் விண்ணப்பதாராரின் மண்பாண்டத்தொழில் செய்யும் இடம் மற்றும் விவசாய நிலம் ஆகியவை ஒரே வருவாய் வட்டத்திற்குள் (Same Taluk) அமைந்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களின் வட்டங்களில் அமைந்துள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஊரணி, குளம், மற்றும் கண்மாய்களில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண்( எடுத்துக் கொள்ள இணையதளம் tnesevai.tn.gov.in வாயிலாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.