சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று 9444717100 என்ற எண்ணில் (24×7) “மனிதம் போற்றுவோம்” மற்றும் “மனிதநேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 6,876 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,823 நபர்களை காப்பகங்களில் தங்க வைத்தும். 1,064 நபர்களை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 745 நபர்களை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அரசு மருத்துவமனையில் 244 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். உரிமை கோரப்படாத 3,712 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது. காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 1,88,019 உணவுகள் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 29.06.2024 அன்று மாலை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி ரோட்டரி கிளப் மெட்ராஸ் சென்டிரல் அமைப்பினர், காவல் கரங்கள் குழுவினரின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 இலகுரக மீட்பு வாகனங்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் காவல் கரங்கள் தன்னார்வலர்களுக்கு மீட்பு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., தி ரோட்டரி கிளப் மெட்ராஸ் சென்டிரல் அமைப்பு நிர்வாகிகள், காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.