தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது, இவருக்குகான கூடுதல் சிறப்பு. விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆட்சியர் பிரியங்காவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு, ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகவும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சார் ஆட்சியராகவும் பணியாற்றி வந்த பிரியங்கா, மதுரை மாவட்டத்தில் கூடுதல் இயக்குனர் வளர்ச்சி மற்றும் செயல் இயக்குனராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றியுள்ளார்.
தஞ்சாவூர், விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட பகுதி என்பதால், இங்கு ஏற்கெனவே பணியிலிருந்த ஆட்சியர்கள் ஏகப்பட்ட சவால்களை சந்தித்தனர். அதுபோல் பிரியங்கா முன்பும் ஏகப்பட்ட சவால்கள் வரிசை கட்டி நிற்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், ஆட்சியர் பிரியங்காவை டெல்டாவின் மகள் என விவசாயிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகின்றனர். காவிரியின் மடியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் வலிகள், துயரங்களை உணர்ந்திருப்பவர். எனவே, விவசாயப் பிரச்னைகளில் தனி கவனம் செலுத்தி சாதுரியமாகக் கையாண்டு சவால்களை சமாளிப்பார் என்கிற எதிர்பார்ப்பு பிரியங்கா மீது எழுந்துள்ளது.
பொதுமக்களிடம் பிரியங்கா சொல்லும்போது ,“தஞ்சை மாவட்டம் விவசாயப் பகுதியாகும்.. எனவே, விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெற்று தர பாடுபடுவேன்.. குறைதீர்க்கும் கூட்டத்தில் பிறப்பிடம் மனுக்கள் மீது உடனடியாக உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
அரசின் நல திட்டங்கள் எல்லாருக்குமே உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். குறுவை சாகுபடி குறைந்த நிலையில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தைரியமாக தொடங்க தமிழக அரசின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும்.. சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக விவசாயத்துக்கும், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.
அதேபோல, அதிகாரிகளிடம் கலெக்டர் சொல்லும்போது, “பொதுமக்கள் கொடுக்கும் ஒவ்வொரு மனுக்களிலும் ஆயிரம் கண்ணீர் துளிகள் இருக்கின்றன.. அதனால், அதிகாரிகள் அனைவரும் சிரித்த முகத்துடன் பணிகளை செய்ய வேண்டும்… மறுபடியும் மறுபடியும் ஒரே மனுக்கள் வருவதை தடுக்கவேண்டும்“ என்று அறிவுறுத்தினார்.
பிறகு கலெக்டராக பொறுப்பேற்றதுமே, முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.. இதில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை மாவட்ட மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். அவைகளை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் 2 மாற்றித்திறனாளிகளுக்கு தலா ரூ.4250 மதிப்பில் காதொலி கருவிகளையும் வழங்கினார். 40 வருடங்களுக்கு பிறகு 2வது முறையாக பெண் கலெக்டர் பொறுப்பேற்றுள்ளதால், விவசாய சங்கத்தினரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திரண்டு வாழ்த்து கலெக்டருக்கு சொல்லி வருகிறார்கள்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயிர்கடன் சில வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளதால், இதுகுறித்தும் கலெக்டர் கவனம் செலுத்தி, பயிர் காப்பீட்டுக்கான அலுவலகத்தை தஞ்சாவூரில் திறந்து வைப்பார் என்றும் டெல்டாவாசிகள் மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அதேபோல, விவசாயிகள் பணியின்போது உயிரிழப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை… எனவே, இதுகுறித்தெல்லாம் அரசின் கவனத்துக்கு சென்று நிவாரணம் கிடைப்பதற்கான நிரந்தர உத்தரவை தந்தால் நல்லா இருக்கும் என்றும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்தவகையில், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கூடிவருகிறது.