நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்
தாராளமாக கழிவுகளைக் கலப்பர்!
நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்
முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் !
பெண் தெய்வங்களைப் போற்றுவர்
பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்!
நித்தம் பண்பாட்டுப் பெருமை பேசுவர்
பிஞ்சு பெண் குழந்தைகளையும் நசுக்குவர்!
பெண்ணுக்கு சமஉரிமை எங்குமென்பர்
அடுப்பறை மட்டும் விதிவிலக்கு என்பர்!
இப்பாழும் பொய் சமூகத்தில் பெண்ணே
உன்னைக் காக்க இனி நீயே
ஆயுதமாகிடு! ஆயத்தமாகிடு!
மனித உரு அரக்கர்களை
உன் அறிவால் அடையாளம் கண்டிடு!
மனித உரு மிருகங்களை
உன் மனவலிமையால் வேட்டையாடிடு!
எச்சரிக்கையை கவசமாய்த் தரித்திடு!
தற்காப்பினைக் கற்றுத் தேர்ந்திடு!
கண்ணியத்தை உன் உடையாக்கிடு!
கடமையைக் கருத்தாக்கிடு!
துணிவைத் தோழனாக்கிடு!
விழிப்புணர்வை இருவிழியாக்கிடு!
முடியுமட்டும் ஆபத்தைத் தவிர்த்திடு
எஞ்சியதை இறையிடம் விட்டுவிடு!
எங்கெங்கு காணினும் சக்தியடா
என்ற பாவேந்தரின்
வரிகளைப் புதுப்பித்திடு!
– மீனாட்சி வெங்கடேஷ்