போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது. காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களை கண்டறிந்து டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸார், ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்