
அந்தி சாய்ந்திடும்நேரம் அவன்முகம் சோகம்!
அழைத்தவள் வரவில்லை எண்ணமெல்லாம் ஏக்கம்!!
களைத்த சூரியனும் மேற்கிலே சாய்ந்தான்!
கவலைகள் தொற்றிக்கொள்ள பாதைகளைப் பார்த்தான்!!
மேற்கிலே வெண்ணிலா மேலோங்கி எழுந்திட!
மசண்ட நேரத்தில் இருட்டும் படர்ந்திட !!
ஒன்றன்பின் ஒன்றாக விண்மீன்கள் ஒளிர்ந்திட!
விண்ணின் விளக்குகள் சரங்களாய் மிளிர்ந்திட !!
கண்கள் சிமிட்டவில்லை இமைகள் காத்திட
காதலும் சிமிழிவிளக்காய் இதயத்தில் எரிந்திட!
பகலுக்கு விடைகொடுத்து இருளும் சூழ்ந்தது
பழகியவள் வரும்பாதையோ
பகலாகவே இருந்தது!
நெஞ்சிலே ஆயிரம் கனவுகள் சுமந்தபடி
நெடுந் தூரத்தில் அவளோ மின்னலாய் வந்தபடி
பூத்ததே ஆயிரம்பூ சிரிச்சிடு ராஜா
பூமகள் வைத்துவிட்டாள்
மலர்ந்தது மனரோஜா!
