
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பட்டுக்கோட்டையை சுற்றிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அரசு பெரிய மருத்துவமனை என்ற அளவில் சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தான் வர வேண்டும். தினமும் உள்நோயாளிகள் வெளிநோயாளிகள் என 500 க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கலில் இருந்தும் நோயாளிகளின் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இப்படி பகல் இரவு என்று பாராமல் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும் சில மருத்துவர்கள் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. குறிப்பாக சில வார்டுகளில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சையில் மட்டுமே மருத்துவர்கள் இருக்கும் நிலையில் இதர பிற முக்கிய வார்டுகளில் ஒரு உதவி மருத்துவர்கள் கூட இருப்பது இல்லை என்பது நோயாளிகளின் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள பல பிரிவில் மருத்துவர் இல்லை, செவிலியர் இல்லை, சிகிச்சை இல்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் வேதனை தெரிவிப்பதாக நமக்கு தெரியவருகிறது. பொதுமக்கள் ஸ்கேன் எடுத்து அதனுடைய ரிப்போர்ட்டை 15 நாட்கள் கழித்து தான் தருவேன் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது, அதையும் மீறி பொதுமக்கள் கேள்வி கேட்டால் நீங்கள் தனியார் மருத்துவமனையில் போய் சேர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
மேலும் இங்கு மருத்துவ ஆய்வுகளுக்காக அதிகாரிகள் வரும்போது மட்டும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இங்கு பணியமர்தி மேம்போக்காக கணக்கு காண்பிக்க மட்டும் உபயோகப்படுத்தப்படுவதாக நமக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
வசதி வாய்ப்பாக இல்லாத மக்கள் அரசு மருத்துவமனையை மட்டுமே தங்களது உயிர்காக்க நம்பி உள்ளனர். அப்படிப்பட்ட அரசு மருத்துவமனை இருந்தும் இயங்காத நிலையில் இருப்பதால் இங்கு வரும் நோயாளிகளை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருப்பி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
புதிய கட்டிடங்கள் நவீன கருவிகள் என்று கோடிக்கணக்கில் அரசு முதலீடு செய்து மருத்துவமனை கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும் நிலையில், அதை நேரடியாக மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில் முறையாக பயன்படுத்தாமல் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்ட மருத்துவ வசதிகள் அனைத்தும் வீணாகி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இந்த பிரச்சனை குறித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் நமக்கு தெரிய வருகிறது.
இந்த விவகாரத்தில் விரைவில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு மருத்துவமனை ஆக இருந்தாலும் நூற்றில் 25 சதவீதம் தொகையாவது வாங்கிவிட்டு சிகிச்சை அளித்தாலும் கூட அரசு மருத்துவமனை என்று எண்ணி வரும் நோயாளிகளின் இத்தகைய சிரமங்கள் குறையும் என்பது இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் சார்பில் கோரிக்கையாக எழுந்துள்ளது.
