“நேர்மைதான் நம்ம சம்பாத்தியம்” – ஒரு தூய்மைப் பணியாளரின் உயர்ந்த மனிதம்
நகரத்தின் சாலைகள் சுத்தமாக இருக்க, விடியற்காலையிலேயே தன் வேலையைத் தொடங்கும் ஒரு சாதாரண தூய்மைப் பணியாளர். ஆனால், அவருடைய செயல் அசாதாரணமானது.

இவர் இருபது ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். தினமும் மக்கள் பலர் அவர்களுக்கு உணவு வழங்குவார்கள். சிலர் மரியாதையுடன் கையில் கொடுத்தாலும், சிலர் சங்கடப்பட்டு சாலையோரத்தில் வைத்து விட்டு செல்வார்கள். அந்த நாள் கூட அப்படித்தான் ஒரு பை சாலையோரத்தில் இருந்தது.
“சாப்பாடு இருக்குமோ?” என்ற எண்ணத்தில் அவர் அந்தப் பையை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினார். ஆனால் பையைத் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி! பை முழுவதும் நகைகளால் நிரம்பியிருந்தது.
ஒரு கணம் கூட தயங்காமல், அவர் நேராக தனது அலுவலரிடம் சென்று விபரத்தை தெரிவித்தார். அலுவலர் உடனடியாக அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஏற்கனவே நகையை இழந்தவர்கள் பதற்றத்துடன் இருந்தனர்.
அந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் -பத்மா அவர்களின் அந்த தருணம், மனிதநேயத்தின் உயரத்தை உணர்த்தியது.
“அது நான் சம்பாதிச்சதல்ல. அதை சம்பாதிச்சவங்க மனசு எவ்வளவு தவிச்சிருக்கும்! அடுத்தவங்க சம்பாதிச்சதை நான் வைத்துக்கிட்டு என்ன பண்ணப் போறேன்? என் சுய சம்பாத்தியத்துல போட்டுருக்க இந்த மஞ்சக் கயிறு போதும் எனக்கு. நேர்மைதான் நம்ம சம்பாத்தியம்,” என்று அவர் எளிமையாகச் சொல்கிறார்.
இன்றைய உலகில் பொருள் ஆசை பலரையும் வழி தவறச் செய்யும் காலத்தில், இந்த தூய்மைப் பணியாளரின் செயல் சமூகத்திற்கு ஒரு பெரிய பாடமாக திகழ்கிறது. பதவியோ, செல்வமோ மனிதனை உயர்வாக மாற்றாது; நேர்மையும் மனசாட்சியும் தான் மனிதனின் உண்மையான அடையாளம் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
நகரின் சாலைகளை சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கும் அவர், அந்த நாளில் சமூகத்தின் மனசாட்சியையும் சுத்தமாக்கியிருந்தார்.
