புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா மோகனூரில் பட்டியலின பறையர் சமூக மக்கள், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வழக்கம்போல வேம்பம்பட்டி முருகன் கோவிலுக்கு குஞ்சிதேவன் தெருவழியாக, பால்குடம் காவடி எடுத்துகொண்டு மேலதாளத்துடன் கொண்டாட்டமாக சென்றிருக்கிறார்கள்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறி கும்பல், கள்ளர் சாதியை சேர்ந்த விஜய் த/பெ. ராமசாமி தலைமையில் (இவன் ஓராண்டுக்கு முன் பறையர் சமூக பெண்ணை காதலித்து ஏமாத்தியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார், தற்கொலைக்கு தூண்டியதாக இவன் மீது வழக்கு உள்ளது) வினோத், மார்கண்டன், ஆதித்தியன், கார்த்திக், மதியழகன், முத்து, ஸ்ரீராம், ராமச்சந்திரன், ரமேஷ், சக்திவேல், கூத்தூர் சூர்யா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கும்பல் பறையனுங்க அவ்வளவு கொண்டாட்டமா எங்க தெருவுக்குள்ள போறீங்களாடா என, கொடிய ஆயுதங்களான அரிவாள், பட்டாகத்தி, இரும்பு கம்பி, சுத்தியல், மரக்கட்டை போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதில் 2 பெண்கள் உட்பட 11 க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் பிரசாந்த் என்ற தமிழ்நாடு அரசு மின்சார ஊழியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். பல பேருக்கு தலை முகம் மார்பு வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களும், ஒருவருக்கு கை முறிவும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கந்தர்வகோட்டை காந்தி சிலை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் இரா.பிருந்தா தலைமையிலான போலீஸார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் கலைந்து செல்லாததால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் சுகுமாறன் தாக்கியதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களை கண்டித்து கந்தர்வக்கோட்டை விசிக மாவட்டச் செயலாளர் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது.
