தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டை போல் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுமா? என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
தேர்வின்றி தேர்ச்சி:
தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி பிற மாநிலங்கள் பள்ளிகளை திறக்கத் தொடங்கின. இதனால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் மிகவும் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது.கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிய தொடங்கினர். தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.இருப்பினும் தற்போது வரை 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில், அவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவார்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ‘பொறுத்திருந்து பாருங்கள்’, இது தொடர்பான முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.