திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (த.கா.1953) அவர்கள் கடந்த 30.07.2023-ந் தேதியன்று அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கடந்த 01.08.2023-ந்தேதியன்று இரவு உயிரிழந்தார். இது சம்மந்தமாக திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு குற்ற எண். 2205/23 U/s 279, 337 IPC @ 279,337, 304 (ii) IPC-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, காரை ஓட்டி வந்த எதிரி மணிவேல் என்பவர் 02.08.2023-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேற்படி இறந்து போன தலைமைகாவலர் ஸ்ரீதர் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைக் காவலர் ஸ்ரீதரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,00,000/- (ரூபாய் இருபத்தைந்து இலட்சம்) நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்கள்..
அதன்படி 27.08.2023-ந்தேதி திருவாரூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையம் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இறந்து போன தலைமைகாவலர் ஸ்ரீதர் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறி ரூபாய்.25,00,000/-கான (ரூபாய் இருபத்தைந்து இலட்சம்) காசோலையை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், இ.ஆ.ப மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப அவர்களும் உடனிருந்தார்கள்.