ஆச்சரியத்தில் உறைந்த காதர் ஒருமுறை நாயகனை மேலும் கீழும் பார்த்தார். “என்னைய பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. கதவை திறக்க சொல்லுங்க” என்றார் கதாநாயகன். இவர்கள் இருவரும் நடந்து வருவதைப் பார்த்து சம்பவம் நடந்த அறையில் முன்னே அமர்ந்து இருந்த இரு காவலர்களும் எழுந்து காதருக்கு சலியூட் வைத்தனர். காதர் வேகமாக நடந்து சென்று அறையின் கதவை திறக்கும் படி ஆணையிட்டதோடு அவர்கள் இருவரில் ஒருவரை அறையில் பின்னே வரும்படியும் மற்றொருவரை மேலாளரை அழைத்து வரும்படியும் கூறினார்.
கதவு திறக்கப்பட்டவுடன் அறையின் உள்ளே சென்ற கதாநாயகன் அதை சுற்றி முற்றி நன்றாக கூர்ந்து கவனித்தார். பின்புறம் உள்ள தோட்டத்திற்கு செல்லும் கண்ணாடி கதவை திறந்து, அதன் வழியாக அறையை விட்டு வெளியேறி, தோட்டத்தின் நடுப்பகுதிக்கு சென்றார். திறக்கப்பட்ட கதவு அதுவாக மூடிக்கொண்டது. இருப்பினும் கண்ணாடி கதவு என்பதால் திரைவிளக்கப்பட்டிருந்த நிலையில் அறையின் முழு பகுதியையும் பார்க்க முடிந்தது. தோட்டத்தை சுற்றி அனைத்து திசைகளிலும் வட்ட வடிவில் கட்டப்பட்டிருந்த எல்லா அறைகளுக்கும் இதே நிலைமைதான். அறையின் பின்னால் வரச் சொல்லி அனுப்பிய காவலர் ஒரு வழியாக வந்து சேர்வதற்கு சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலானது. காதர் அறையின் உள்ளே இருந்தார் எனவே கதாநாயகனை இதற்கு முன் அந்த காவலர் பார்த்திடாத நிலையில், இவர் யார்? என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்ததால் கதாநாயகனிடம் வந்து “சாமி இதுக்கு முன்னாடி உங்களை பார்த்தது இல்லையே என்றார்” அந்த காவலர். சிரித்துக்கொண்டே கதாநாயகன், அந்த காவலரைப் பார்த்து “இங்கு ஏதோ ஒரு பொண்ணு ஆத்மா ஆனதுனால என்னை வந்து பார்த்து எனக்கு நியாயம் கிடைக்க உதவி பண்ணுங்கன்னு கேட்டுச்சு. அதை வந்து சொன்னேன் என்னை இங்கு கூட்டிட்டு வந்துட்டாங்க அந்த சார்”. என்று காதரை நோக்கி கை நீட்டினார். அந்த காவலரும் பக்தியுடன் “ஐயா நீங்க தப்பா நினைக்கவில்லை என்றால் எங்க ஸ்டேஷனிலும் துப்பு கிடைக்காமல் இரண்டு கேஸ் இருக்கு நீங்க தான் அந்த ஆத்மாக்கள் கிட்ட பேசி எப்படியாவது எங்களுக்கு ஏதாவது ஒரு துப்பு கிடைப்பதற்கு ஏற்பாடு பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் பூஜைக்கு உண்டான செலவை எல்லாம் கூட நானே கொடுத்துடறேன். பெரிய மனசு பண்ணி கொஞ்சம் உதவி பண்ண முடியுமா?” என்றார். அந்த காவலருடன் தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்த கதாநாயகன் சிரித்துக்கொண்டு “அவ்வளவு தானே, இதை முடிச்ச உடனே கண்டிப்பா உங்களுக்கு முடிச்சு கொடுத்துடறேன். கவலைப்படாதீங்க, இப்போ நீங்க நான் கேட்பதற்கு மட்டும் எனக்கு உதவி பண்ணுங்க” என்றார். பேசிக்கொண்டே காவலரை அழைத்துக் கொண்டு “நீங்கள் வந்த வழியை எனக்கு காட்டுங்கள்” என்று கூறி அவருடன் நடக்க தொடங்கினார். செல்லும் வழியில் அனைத்து அறை கதவுகளையும் கவனமாக உற்றுப் பார்த்ததோடு முதல் மாடியில் உள்ள அனைத்து அறைகளையும் மற்றும் மொத்த கட்டிடத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டார். தோட்டத்திலிருந்து கட்டிடத்திற்குள் சென்ற பாதை சமையலறை பகுதிக்கு வந்தடைந்தது. சமையலறை பகுதியில் பெரிய பெரிய ஜன்னல்கள் கண்ணாடிகளால் கவரப்பட்டிருந்தன சமைத்துக் கொண்டிருப்பவர்கள் கண்ணில் படாமல் யாரும் வெளியே வரவும், போகவும் முடியாது.
சமையலறை தாண்டி நடக்கத் தொடங்கிய இருவரும் நேரடியாக ஓட்டல் காவலர்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தனர். ஆள் உயரத்திற்கு மேல் எழுப்பப்பட்ட சுவர்கள், வானளவு உயர்ந்த கதவுகள் என்று எவரும் முற்போக முடியாத வண்ணம் இருந்தது அந்த நுழைவு வாயில். ஒரு நிமிடம் நின்று அனைத்தையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கதாநாயகனிடம் அந்த காவலர் “சாமி இந்த பக்கம் போகணும்” என்று இடது புறமாக மீண்டும் ஒரு வழியை காட்டினார். அதில் தொடர்ந்து பயணிக்க தொடங்கிய இருவரும் ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து சேர்த்து வைக்கும் இடத்தை அடைந்தனர். அனைத்தையும் கவனித்துக் கொண்டே வந்த கதாநாயகன் உடன் வந்த காவலரிடம் “தற்போது எந்த பக்கம்” என்று கேட்டார். மீண்டும் வலது புறமாக கை நீட்டிய காவலர் “இதோ வந்து விட்டோம்” என்று கூறி நடக்க தொடங்கினார். அவரை பின் தொடர்ந்த கதாநாயகன் பணியாளர்கள் தங்கி இருக்கும் அறைகளை கடந்து சென்றதை கவனிக்க தவறவில்லை. அந்த வழி நேராக வரவேற்பறைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு பின்னால் இருந்த கதவின் நுழைவாயிலை சென்றடைந்தது. கதாநாயகன் கதவை திறந்ததும் வேலை செய்து கொண்டிருந்த பென்கள் திடுக்கிட்டு எழுந்து திரும்பி பார்த்தனர். உடன் வந்த காவலரை பார்த்ததும் பெருமூச்சு விட்டு இருவரும் வெளியே செல்வதர்க்கு தரமான மரத்தால் பளபளவென்று சுத்திலும் மூடப்பட்டிருந்த ஒரு பகுதியை திறந்து விட்டு அமர்ந்தனர்.
முந்திக்கொண்டு முன்னே சென்ற கதாநாயகன் வெளியே சென்றதும் உடனடியாக அந்த வழியை வெளியில் இருந்து அடைத்தார். பதறிப்போன அந்த காவலர் “சாமி நான் இன்னும் வெளியே வரவில்லையே அதுக்குள்ள அடைச்சிட்டீங்க” என்றார். “மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க, பழக்க தோஷத்தில் சாத்திட்டேன்” என்று கூறி வெளிப்புறமிருந்து கதவை திறக்க முடியாத நிலையை கவனித்த கதாநாயகன் “நீங்க வந்த வழியாகவே நேரா பின்னாடி வந்துருங்க”. என்று கூறிவிட்டு மீண்டும் சென்று சம்பவம் நடந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு காதர், மேலாளர் மற்றும் மற்றொரு அதிகாரியும் இருந்தனர். அந்த மற்றொரு அதிகாரியிடம் காதர் வழக்கு குறித்த தடயங்கள் மற்றும் மருத்துவமனை பரிசோதனை முடிவுகள் குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தார். கதாநாயகனை பார்த்ததும் “அடுத்து என்ன? கருப்பையா” என்று கேட்டார் காதர். “ஒன்றுமில்லை அய்யா அறையின் பின்பக்கம் உள்ள தோட்டம் அழகாக இருக்கும் போல தெரிகிறது ஆனால் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை. முதல் தளத்திலிருந்து பார்த்தால் முழுமையாக நன்றாக தெரியும் என்று நம்புகிறேன். ஆகையால் நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் மேலாளரை எனக்கு சுற்றிக்காட்ட சொல்லுங்கள்” என்று காதரிடம் கூறினார் கதாநாயகன். அதைக் கேட்டதும் “சார், அப்படி எல்லாம் பண்ண முடியாது. எல்லா ருமிலும் கெஸ்ட் இருக்காங்க. நீங்க, டிபார்ட்மென்ட் ஆளு. கேஸ் விஷயமா கேளுங்க செய்கிறோம். இவர் யாருன்னு தெரியாது. சாமியாரை கூட்டிட்டு வந்து சுற்றி காட்ட சொன்னா எங்களால கண்டிப்பா முடியாது”. என்றார் மேலாளர். காதர் சிரித்துக்கொண்டே “அப்போ சரி. மருத்துவமனை ரிப்போர்ட்டில் கொலை என்றும் வந்ததும், கோர்ட்டில் ஆர்டர் வாங்கி, ஹோட்டலுக்கு சீல் வைத்துவிட்டு அதன் பிறகு சென்று கொள்ளலாம். இப்போது தேவையில்லை. இனி இங்கு வேலை இல்லை.வாங்க செல்லலாம் என்று உள் நின்று கொண்டிருந்த மற்றொரு காவலரை பார்த்து காதர் கூறியதும் குப்பென்ரு வியர்த்து நனைந்தார் மேளாலர்.
(தொடரும்…)