சென்ற மாத இதழில் பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன் பொதுமக்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..? என்று கேள்வி கேட்டு செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், தான் லஞ்சம் வாங்கி வந்ததை வேகப்படுத்தி வெற்றிநடை போட்டுக்கொண்டுள்ளார். இவர் தாசில்தாரின் உறவினர் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது.
சாமானிய பொதுமக்கள் பொன் மணிகண்டனுக்கு கட்டாயமாக பணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்டமாக நிலம் தொடர்பான பட்டா, சிட்டா போன்ற மனுக்களுக்கு தாசில்தாரை பார்க்க முடிகிறதாம். இவருக்கு பணம் கொடுக்காமல் பொதுமக்கள் எவரையும் இவர் தாசில்தாரை பார்க்க விடுவது இல்லையாம். கற்றறிந்த படிப்பறிவு காரணமாக அதிகாரிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆனால் அந்த அதிகாரியின் உடன் செல்லும் உதவியாளருக்கு சென்ற இடமெல்லாம் செழிப்பு என்பது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது.
தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.சி தரச் சான்றிதழ் பெற்ற பள்ளிகளுக்கு வட்டாட்சியர் ஆய்வுக்கு சென்றால் வாகன எரிபொருளுக்காக ரூபாய் 5000 மற்றும் அரசு அலுவலக மேம்பாட்டிற்காக ரூபாய் 5000 என்று வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்டாயமாக பொருள்கள் வாங்கிதரவேண்டும் என்று கரார் செய்கிறாறாம்.மேலும் மனைச்சான்று வாங்குவதற்கு வட்டாட்சியரை சந்திக்க வந்தால் இவர் பேரம் பேசுகிறார். பொதுமக்களிடம் கட்டாயமாக பணம் பெறுவதோடு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் பல காரணங்களை கூறி மிரட்டியும், பொய்கள் கூறியும் பணம் பெறுவதோடு பணத்தைக்கொண்டு வேலை நேரத்தில் வேலைக்கு வராமல் மது அருந்திவிட்டு ரோட்டில் கிடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து துறைரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சவுடு மண் அள்ளுவதற்கு இவரால் 1 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பொதுமக்களை பாதிப்படையச் செய்து லஞ்சம் பெற்றுக்கொண்டு வரும் பொன் மணிகண்டன் போன்றவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணம் என்ன? இவர் செய்யும் தவறை ஊக்குவிப்பது போல் ஆகிவிடாதா? ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.